எப்போ எப்படி ஆடணும்னு கோலிக்கு தெரியும்.. அவர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்..! ராகுல் டிராவிட் புகழாரம்
விராட் கோலிக்கு எப்போது எப்படி ஆடவேண்டும் என்று நன்றாக தெரியும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு ஆதரவாக பேசியதுடன், வெகுவாக புகழ்ந்தும் உள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2019 நவம்பருக்கு பின் சதமே அடிக்காமல் இருந்துவந்த விராட் கோலி, ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கினார்.
அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அது விராட் கோலியின் 44வது சதம். சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 72வது சதம். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் (72) சாதனையை சமன் செய்தார்.
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்துள்ளார். எனவே இன்னும் 6 சதங்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். 72 சதங்கள் அடித்துள்ள கோலி இன்னும் 29 சதங்கள் அடித்தால், சச்சின் சாதனையை முறியடிக்கலாம். விராட் கோலி சச்சின் சாதனையை முறியடிப்பாரா மாட்டாரா என பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், எப்போது ஆக்ரோஷமாக அடித்து ஆடவேண்டும், எப்போது நிதானமாக ஆடவேண்டும் என்பது விராட் கோலிக்கு நன்றாக தெரியும். அவர் நிலைத்து நின்று ஸ்கோர் செய்வது இந்திய அணிக்கு பலம். ஒருநாள் போட்டிகளில் கோலி தலைசிறந்த வீரர். அவர் குவித்துள்ள ரன்களும், படைத்துள்ள சாதனைகளுமே அதற்கு சான்று. கோலி பல இக்கட்டான தருணங்களில் அருமையாக ஆடியிருக்கிறார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் சீனியர் வீரர்கள்.. ப்ரமோஷன் பெறும் 2 தரமான பேட்ஸ்மேன்கள்
கோலி ஃபார்மில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வலைப்பயிற்சியில் அவர் காட்டும் தீவிரம் குறையவேயில்லை. பயிற்சியில் அவர் ஒவ்வொரு முறை ஆடுவதை பார்க்கையில் அவர் பழைய ஃபார்முக்கு திரும்புவதாகவே நான் பார்க்கிறேன். அவரது அர்ப்பணிப்பு, தீவிர பயிற்சி, செயல்பாடு ஆகியவை இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது என்றார் ராகுல் டிராவிட்.