விறுவிறுப்பாக நடந்துவரும் ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று வரும் 5ம் தேதியுடன் முடிவடைகிறது. பிளே ஆஃப் சுற்று வரும் 7ம் தேதி தொடங்குகிறது. 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு சன்ரைசர்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனில் பேட்டிங்கில் வார்னர், ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் பவுலிங்கில் ரபாடா, இம்ரான் தாஹிர், ஷ்ரேயாஸ் கோபால் ஆகியோரும் மிரட்டிவருகின்றனர். 

2012ம் ஆண்டுக்கு பிறகு இந்த சீசனில்தான் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. அதற்கு முக்கியமான காரணம் ரபாடா. ரபாடாவின் மிரட்டலான அபாரமான ஃபாஸ்ட் பவுலிங், அந்த அணியின் பல வெற்றிகளுக்கு காரணம். டெத் ஓவர்களில் எதிரணி வீரர்களை அதிக ரன்கள் அடிக்கவிடாமல் ரபாடா கட்டுப்படுத்திவிடுகிறார். 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரபாடா, இந்த சீசனில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக திகழ்கிறார். 

இந்த சீசனின் சிறந்த பவுலரான ரபாடா, இந்த சீசனின் அபாயகரமான பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல் என்று தெரிவித்துள்ளார். இந்த சீசன் ரசலுக்கு மிகவும் சிறந்ததாக அமைந்தது. ஒவ்வொரு பந்தையுமே சிக்சர் அடிக்க வேண்டும் என்ற முனைப்பிலேயே ஆடுகிறார். அவருக்கு பந்துவீசுவது கடினம் என்று ரபாடா தெரிவித்துள்ளார். 

இந்த சீசனில் கேகேஆர் அணி பெற்ற அனைத்து வெற்றிகளிலும் ரசலின் பங்களிப்பு அளப்பரியது. 5ம் வரிசைக்கு பின்னர் களமிறங்கி, அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளார் ரசல். 11 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி 50 சிக்ஸர்கள், 29 பவுண்டரிகளுடன் 486 ரன்களை குவித்துள்ளார்.