ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது.

லீக் சுற்றின் கடைசி போட்டியில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் மோதுகின்றன. மாலை 4 மணிக்கு மொஹாலியில் நடந்த  போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப்பும் மோதின.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் டுபிளெசிஸ் மற்றும் ரெய்னாவின் அதிரடியான மற்றும் பொறுப்பான அரைசதத்தால் சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் அடித்தது. டுபிளெசிஸ் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

171 ரன்கள் என்பது பேட்டிங்கிற்கு சாதகமான மொஹாலி ஆடுகளத்தில் எளிய இலக்கு. 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்களில் ராகுல் ஆட்டமிழக்க, அதே ஓவரில் கெய்லையும் வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். அதன்பின்னர் ரன்ரேட் குறைய தொடங்கியது. ஆனால் ராகுல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்ததால் மற்ற வீரர்களின் பணி எளிமையானது.

18வது ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. ஆனாலும் இந்த வெற்றியால் பஞ்சாப் அணிக்கு எந்த பலனும் இல்லை. 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி தோற்றாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.