Asianet News Tamil

நம்ம ஒதுங்குறத பார்த்து பதுங்குறம்னு நெனச்சிட்டாங்க போல.. புஜாரா கடும் பாய்ச்சல்

தனது மெதுவான பேட்டிங்கை விமர்சிப்பவர்களுக்கு விளக்கமாக பதிலடி கொடுத்துள்ளார், இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா.

pujara retaliation to who are criticising his slow batting
Author
India, First Published Mar 20, 2020, 10:22 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. மற்ற வீரர்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய டெஸ்ட் போட்டிகளில், நிலைத்து நின்று ஆடி அணிக்காக வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார் புஜாரா. அதனால் இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட்டின் இடத்தை புஜாரா நிரப்பிவிட்டதாக ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடப்பட்டார்.

ஆனால் அவரது மந்தமான இன்னிங்ஸ் எப்போதுமே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. புஜாராவின் மந்தமான பேட்டிங் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆனாலும் அவர் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொண்டதேயில்லை. 

விமர்சனங்களுக்கு செவிமடுக்காமல் தனது இயல்பான ஆட்டத்தையே ஆடிவந்தார். அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமந்தமாக பேட்டிங் ஆடினார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 81 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அணிக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லாத இன்னிங்ஸை ஆடிச்சென்றார் புஜாரா. முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில் இந்திய அணிக்கு அந்த போட்டியில் இழப்பதற்கு எதுவுமேயில்லை. அதனால் துணிந்து ஆடியிருக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் அந்த இன்னிங்ஸில் நிதானமாக ஆடி நாட்களை கடத்தி, அதன்மூலம் வெற்றியையோ அல்லது டிரா செய்வதற்கோ கூட வாய்ப்பில்லாமல் இருந்தது. அப்படியான சூழலில் எதற்காக கட்டை போட்டு நின்றார் என்று யாருக்குமே புரியாத அளவிற்கு, 81 பந்துகள் பேட்டிங் ஆடி 11 ரன்களை மட்டுமே அடித்து விட்டு நடையை கட்டினார் புஜாரா. 

புஜாராவின் மந்தமான இன்னிங்ஸால் கடுப்பான கேப்டன் விராட் கோலி, அந்த போட்டிக்கு பின்னர், புஜாராவை தாக்கும் விதமாக, மெதுவான இன்னிங்ஸ் ஆடியதை கடுமையாக விமர்சித்திருந்தார். புஜாராவை மட்டுமல்ல, ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோருக்கும் உரைப்பதற்காகத்தான் கோலி அப்படி பேசினார்.

ஆனால் அதன்பின்னரும் கொஞ்சம் கூட தனது பேட்டிங் இயல்பை மாற்றிக்கொள்ளாத புஜாரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அப்படித்தான் ஆடினார். அதன்பின்னர் ரஞ்சி இறுதி போட்டியிலும் அதைவிட மோசமாக ஆடினார். பெங்கால் அணிக்கு எதிரான ரஞ்சி இறுதி போட்டியில் 237 பந்துகளை எதிர்கொண்டு 66 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இவ்வாறு புஜாரா மந்தமாக ஆடிக்கொண்டிருக்க, அவரது மந்தமான இன்னிங்ஸை ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பயங்கரமாக கிண்டலடித்ததுடன் விமர்சனமும் செய்தனர். இதையடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு புஜாரா அளித்த பேட்டியில், சமூக வலைதளங்களுக்காகவோ, எண்டர்டெய்ன் செய்வதற்கோ என்னால் பேட்டிங் ஆடமுடியாது. அணியின் நலனுக்காகவும் வெற்றிக்காகவும் தான் நான் பேட்டிங் ஆடுவேன். டெஸ்ட் போட்டிகளை பற்றி தெரியாமல் விமர்சிக்கிறார்கள் என்று தடாலடியாக பதிலடி கொடுத்திருந்தார். 

இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு புஜாரா அளித்த பேட்டியில், எனது பேட்டிங்கை பற்றி அணி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. வெளியே மீடியா தான் அதை வேறு கோணத்தில் காட்டுகிறது. ஆனால் அணி நிர்வாகம் எனது பேட்டிங்கை பற்றி புரிந்துகொண்டு எனக்கு ஆதரவாகவே இருக்கிறது. என் மீது கேப்டனோ பயிற்சியாளரோ எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. 

எனது ஸ்டிரைக் ரேட் மிகவும் குறைவாகவுள்ளது என்றூ விமர்சிக்கிறார்கள். எனது குறைவான ஸ்டிரைக் ரேட்டை சுட்டிக்காட்டி அணி நிர்வாகத்தை நோக்கி கேள்வியெழுப்புகிறார்கள். ஆனால் அணி நிர்வாகம் என் மீது எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அணி நிர்வாகம் எனது ஆட்ட பாணியையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருக்கிறது. 

ரஞ்சி ஃபைனலில் நான் ஆடிய விதத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் நான் கண்டுகொள்வது கூட இல்லை. இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மட்டுமே எனது பணியும் நோக்கமும்.

மக்கள் என்னிடம் இருந்து பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் 100 ரன்கள் அடிப்பதையே எனக்கு சவாலாக வைத்துக்கொண்டு ஆடுபவன். எனது டெஸ்ட் சராசரி கிட்டத்தட்ட 50 ரன்கள். அப்படியென்றால் பெரும்பாலான இரண்டாவது இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்திருக்க வேண்டும். எனது ஸ்டாண்டர்டு எப்போதுமே உயர்ந்தது. சமீபத்திய நியூசிலாந்து தொடர் சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் அது மோசமானது என்று நான் கூறமாட்டேன். 

எனது பேட்டிங் தரமோ கலையோ குறைந்துவிட்டதாக நன் நினைக்கவில்லை. இளைஞர்கள் டெஸ்ட் ஃபார்மட்டை சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். அதுகூட விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கலாம். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை அதிகமாக பார்ப்பவர்கள் இதுமாதிரி நினைக்கலாம். அதனால் கூட ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அடித்து ஆடுபவர்களுடன் ஒப்பிட்டு விமர்சிப்பதையோ அல்லது அதிரடி வீரர்களை சிலாகிப்பதையோ வழக்கமாக கொண்டிருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்பதை உணர்ந்து, அதில் ஆடுவதை பொறுத்து ஒரு வீரரை மதிப்பீடு செய்ய வேண்டும்.

நான் டேவிட் வார்னராகவோ, வீரேந்திர சேவாக்காகவோ ஆகமுடியாது என்பது எனக்கு தெரியும். ஆனால் ஒரு சராசரி பேட்ஸ்மேன், நேரம் எடுத்துக்கொண்டு ஆடுவதில் எந்த தவறும் இல்லை என்று தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Also Read - எனது கேப்டன்சியில் இந்தியாவுக்கு எதிரான அந்த சம்பவம் படுமோசமானது.. 12 வருஷம் கழிச்சு கூட வருந்தும் பாண்டிங்

புஜாரா 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 18 சதங்களுடன் 5840 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டு வைத்திருந்தாலும், அவரது மெதுவான இன்னிங்ஸை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. புஜாரா மீதான விமர்சனம் நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில், முன்பெல்லாம் அதுகுறித்து பெரியளவில் கண்டுகொள்ளாத புஜாரா, அண்மையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார். 

Follow Us:
Download App:
  • android
  • ios