உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 

ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் எடுக்கப்பட்டதுகூட எதிர்பார்க்கப்பட்டது தான். ஆனால் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டது அதிர்ச்சிகரமான தேர்வுதான். ஏனெனில் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக்கைவிட ரிஷப் பண்ட்டுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி, அதன்மூலம் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்த ரிஷப் பண்ட், உலக கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்துவிட்டதாகவே பலரும் பார்த்தனர். 

தினேஷ் கார்த்திக் டி20 போட்டிகளுக்கு மட்டுமே எடுக்கப்பட்டதால் அவரை டி20 வீரராக மட்டுமே தேர்வுக்குழுவும் அணி நிர்வாகமும் பார்ப்பதாக ஒரு தோற்றம் இருந்தது. அதனால் ரிஷப் பண்ட்டுக்கான வாய்ப்பே இருப்பதாக தெரிந்தது. 

ஆனால் கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட்டை ஓரங்கட்டிவிட்டு தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

தோனி ஆடாதபட்சத்தில் தான் மாற்று விக்கெட் கீப்பர் அணியில் இடம்பெறுவார். அந்தவகையில், முக்கியமான போட்டிகளில் களமிறங்க வேண்டியிருந்தால், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். அதனால் அனுபவ மற்றும் சிறந்த விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தான் அதற்கு சரியாக இருப்பார் என்பதால் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் தெரிவித்திருந்தார். 

தினேஷ் கார்த்திக் நீண்டகாலமாக ஆடிவருவதால் சிறந்த அனுபவம் கொண்டவர். இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து பேசிய டெஸ்ட் வீரர் புஜாரா, தினேஷ் கார்த்திக் நீண்ட அனுபவம் கொண்ட வீரர். அவரது கிரிக்கெட் வாழ்வில் நிறைய ஏற்ற இறக்கங்களை கண்டவர். எனவே சூழலுக்கு ஏற்றவாறு அதை சமாளித்து ஆடக்கூடிய திறன் பெற்றவர். ஏராளமான உள்நாட்டு போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளிலும் ஆடியவர். அதனால் அவரால் எந்த சூழலையும் எதிர்கொண்டு ஆடமுடியும். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கிறதா என்பதுதான் சந்தேகம். அப்படி கிடைத்தால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக புஜாரா பேசியுள்ளார்.