PSL 2023: ஃபைனலில் பேட்டிங்கில் தெறிக்கவிட்ட ஷாஹீன் அஃப்ரிடி! முல்தான் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த லாகூர்
பாகிஸ்தான் சூப்பர் லீக் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்து, 201 ரன்கள் என்ற கடின இலக்கை முல்தான் சுல்தான்ஸுக்கு நிர்ணயித்தது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இன்று நடந்துவரும் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - லாகூர் காலண்டர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. கோப்பைக்கான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற லாகூர் காலண்டர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
லாகூர் காலண்டர்ஸ் அணி:
மிர்சா தாஹிர் பைக், ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), அசான் பட்டி, சிக்கந்தர் ராசா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
உஸ்மான் கான், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், குஷ்தில் ஷா, அன்வர் அலி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, ஷெல்டான் காட்ரெல், ஈசானுல்லா.
முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் மிர்சா தாஹிர் அதிரடியாக ஆடி 18 பந்தில் 30 ரன்கள் அடித்தார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஜமான் 34 பந்தில் 39 ரன்கள் மட்டுமே அடித்தார். 3ம் வரிசையில் ஆடிய அப்துல்லா ஷாஃபிக் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் ஷாஃபிக் 65 ரன்கள் அடித்தார். சாம் பில்லிங்ஸ்(9), ஆசன்(0), சிக்கந்தர் ராஸா(1) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி காட்டடி அடித்து 15 பந்தில் 5 சிக்ஸர்களுடன் 44 விளாசி, அபாரமாக இன்னிங்ஸை முடித்து கொடுக்க, லாகூர் காலண்டர்ஸ் அணி 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது.
ஃபாஸ்ட் பவுலரான ஷாஹீன் அஃப்ரிடி வேற லெவலில் பேட்டிங் ஆடினார். அவரது அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்த லாகூர் அணி, 201 ரன்கள் என்ற கடினமான இலக்கை இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.