இரண்டாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால்தான் தொடரை வெல்லும் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்க வாய்ப்புள்ளது. ரோஹித், தவான், ராகுல், ஷ்ரேயாஸ், ரிஷப் ஆகியோர் ஆடுவது உறுதி. அதேபோல க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோரும் கண்டிப்பாக இருப்பார்கள். இவர்களில் க்ருணலும் சுந்தரும் நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஸ்பின்னர்கள். வங்கதேச அணி லெக் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவதால், சாஹல் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

கடந்த போட்டியில் ஆடிய ஃபாஸ்ட் பவுலர்களான கலீலும் தீபக் சாஹருமே இந்த போட்டியிலும் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது. ஒருவேளை இதில் மாற்றம் செய்தால் தீபக் சாஹருக்கு பதிலாக ஷர்துல் தாகூரை இறக்கலாம். ஆனால் அந்த மாற்றம் செய்யப்பட பெரும்பாலும் வாய்ப்பில்லை. ஏனெனில் தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். எனவே தொடக்கத்திலேயே ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திக்கொடுக்க வல்ல பவுலர் என்பதால் அவரே ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். 

கடந்த போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட ஷிவம் துபே, சரியாக ஆடவில்லை என்றாலும், அவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதால் உடனடியாக நீக்கப்பட வாய்ப்பில்லை. சில வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த வகையில், அவரும் கண்டிப்பாக இன்றைய போட்டியில் ஆடுவார். அதுமட்டுமல்லாமல் அவர் பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் என்பதால் அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. 

கடந்த போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் இறங்க வாய்ப்பிருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டியிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, சாஹல், கலீல் அகமது, தீபக் சாஹர்.