இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில், இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. 

முதல் போட்டியில் ஆடிய, அதே வீரர்களுடன் தான் இந்திய அணி இந்த போட்டியில் களமிறங்கும். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. மனீஷ் பாண்டே அணியில் எடுக்கப்பட்டு, ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படாமல் பென்ச்சிலேயே கடந்த சில தொடர்களாக உட்கார வைக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் அணியில் அவர் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புமில்லை. 

ஏனெனில் ஷிவம் துபே அல்லது கேதர் ஜாதவ் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டுத்தான் மனீஷ் பாண்டேவை சேர்க்க முடியும். ஆனால் அவர்கள் இருவருமே பவுலிங்கும் வீசுவார்கள் என்பதால் அவர்கள் தான் அணியில் இடம்பெறுவார்கள். அதனால் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. 

2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஷிவம் துபே, ஜடேஜா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர், ஷமி.