இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி இந்த போட்டி தொடங்குகிறது. 

இரு அணிகளுமே டி20 தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளன. இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் ஆடிய நட்சத்திர அதிரடி வீரர்களுக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான அவர்கள் எல்லாம் இல்லையென்றாலும் கூட, வலுவான அணியாகத்தான் இங்கிலாந்து அணி இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய், காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக ஆடி, பெரிய ஸ்கோரை எட்டுவதற்கான சிறந்த அடித்தளத்தை அமைத்து கொடுக்கவல்ல ஜேசன் ராய் காயத்தால் இந்த தொடரில் ஆடமுடியாமல் போனது அந்த அணிக்கு வருத்தமளிக்கக்கூடிய செயல் தான். ஆனால் அது பின்னடைவாக அமையுமா அமையாதா என்பது மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடி, அவர் இல்லாத குறையை தீர்க்கிறார்களா என்பதை பொறுத்தே அமையும்.

மான்செஸ்டரில் நடக்கவுள்ள இன்றைய முதல் போட்டியில் களமிறங்கும் உத்தேச இங்கிலாந்து ஆடும் லெவனை பார்ப்போம். ஜானி பேர்ஸ்டோவுடன் டாம் பாண்ட்டன் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் வரிசையில் டேவிட் மாலன், பின்னர் கேப்டன் இயன் மோர்கன் ஆகியோரும் ஐந்தாம் வரிசையில் சாம் பில்லிங்ஸும் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான் ஆகியோரும், ஃபாஸ்ட் பவுலர்களாக டாம் கரன் மற்றும் சாகில் மஹ்மூத்தும் ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத்தும் களமிறங்க வாய்ப்புள்ளது. பென்ச்சில் ஜோ டென்லியும் லூயிஸ் க்ரெகோரியும் இருக்க வாய்ப்புள்ளது. 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.