உலக கோப்பை  மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகிவருகின்றன. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு அதிகமாக உள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவிக்கிறது. 

உலக கோப்பைக்கான அணியை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் நான்காம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர், நான்காவது ஃபாஸ்ட் பவுலர் ஆகிய இடங்கள் உறுதி செய்யப்படாமல் இருப்பதால், இந்த இடங்களுக்கு யார் தேர்வாகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கைக் காட்டிலும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது. அதேபோல நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்த விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நன்றாக பேட்டிங் செய்வதால் அவரை நான்காம் வரிசையில் களமிறக்கும் வகையில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

கேஎல் ராகுல் கண்டிப்பாக அணியில் இருப்பார். கோலி, ரோஹித், தவான், தோனி, கேதர், ஹர்திக், குல்தீப், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகிய 11 பேரும் உறுதி. இவர்கள் தவிர விஜய் சங்கர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளது. 15வது வீரராக ஜடேஜாவும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக கோப்பைக்கான உத்தேச இந்திய அணி:

கோலி(கேப்டன்), ரோஹித், தவான், தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப், சாஹல், பும்ரா, ஷமி, கேஎல் ராகுல், விஜய் சங்கர், ஜடேஜா, ரிஷப் பண்ட்.