இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட்டின் பொறுப்பான மற்றும் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 287 ரன்களை குவித்தது. 

288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஹோப்பும் ஹெட்மயரும் இணைந்து மிக அருமையாக ஆடி சதமடித்து, வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தனர். ஹெட்மயரின் அதிரடியான சதம் மற்றும் ஹோப்பின் பொறுப்பான சதம் ஆகியவற்றின் விளைவாக 48வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இந்த போட்டியில் ஜடேஜாவின் ரன் அவுட்டில் ஒரு சர்ச்சை எழுந்தது. 48வது ஓவரில் ஒரு பந்தை அடித்துவிட்டு ஜடேஜா வேகமாக ரன் ஓடினார். அந்த பந்தை பிடித்த ரோஸ்டான் சேஸ், நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். மிகவும் க்ளோசான அந்த ரன் அவுட்டுக்கு கள நடுவர் ஷான் ஜார்ஜ், தேர்டு அம்பயரை நாடாமல், எனக்கென்னவென இருந்தார். இதையடுத்து பொல்லார்டு, மிகவும் க்ளோசான இந்த ரன் அவுட்டுக்கு தேர்டு அம்பயரை நாடாமல் இருப்பது ஏன்? டிவி அம்பயரிடம் கேளுங்கள் என வாக்குவாதம் செய்ததை அடுத்து, தேர்டு அம்பயரின் உதவியை நாடினார் கள நடுவர் ஷான் ஜார்ஜ். அந்த வீடியோ இதோ..

டிவி ரிப்ளேவில் ஜடேஜா அவுட் என்பது உறுதியானது. இதையடுத்து ஜடேஜா வெளியேறினார். போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய பொல்லார்டு, ஒருவழியாக விக்கெட் கிடைத்துவிட்டது. அதுதான் எனக்கு முக்கியம் என்று முடித்துவிட்டார்.