ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. சிஎஸ்கே அணி இதுவரை 11 போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டது. 

இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையே ஏப்ரல் 11ம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கின் கேட்ச்சை தோனி பிடித்தார். ஷர்துல் தாகூரின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பராக் அவுட்டானார். 

தற்போது ரியானின் கேட்ச்சை பிடித்த தோனி, 20 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தையை ரஞ்சி போட்டி ஒன்றில் ஸ்டம்பிங் செய்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்(1999-2000) பீஹார் மற்றும் அஸ்ஸாம் அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி போட்டியில் அஸ்ஸாம் அணியின் தொடக்க வீரர் பராக் தாஸை அப்போதைய இளம் விக்கெட் கீப்பரான தோனி ஸ்டம்பிங் செய்தார். தந்தையின் விக்கெட்டை வீழ்த்திய தோனி, 20 ஆண்டுகளுக்கு பின் மகனின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். 

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தோனிக்கு ரியான் பராக் பந்துவீசினார். இந்நிலையில், ரியான் பராக்கையும் அவரது தந்தையையும் தோனி அவுட்டாக்கியது குறித்து டுவீட் செய்திருந்தார். இந்நிலையில், தனது மகன் தோனிக்கு பந்துவீசியது குறித்த தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பராக் தாஸ். ரியான் தோனிக்கு பந்துவீசியதை என்னால் நம்பவே முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

17 வயதே ஆன ரியான் பராக், கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியில் கூட அருமையாக பேட்டிங் ஆடினார். கடந்த சில போட்டிகளில் ராஜஸ்தான் அணியில் தொடர்ச்சியாக களமிறங்கினாலும் சரியாக ஆடாமல் இருந்துவந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடினார். பேட்டிங் மட்டுமல்லாமல் ஸ்பின் பவுலிங்கும் நன்றாக போடுகிறார் ரியான்.