Pakistan ODI World Cup Squad: ஒருவழியாக அணியை அறிவித்த பாகிஸ்தான்: உசாமா மிர், ஹசன் அலிக்கு வாய்ப்பு!
ஒருநாள் கிரிக்கெட் உலக் கோப்பை 2023 தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடருக்கான 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும், எந்தெந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியனாகும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 10 அணிகளும் 10 மைதானங்களில் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 9 போட்டியில் விளையாடுகிறது.
ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் தவிர மற்ற அணிகள் அனைத்தும் உலகக் கோப்பைக்கான தங்களது அணி வீரர்களை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இலங்கையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான், தற்போது உலகக் கோப்பைக்கான வீரர்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான்:
ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், அப்துல்லா ஷாஃபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, அகா சல்மான், ஷதாப் கான், உசாமா மிர், முகமது நவாஸ், ஷாகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஷ் ராஃப், முகமது வாசீம், ஹசன் அலி.
இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவிற்குப் பதிலாக, ஹசன் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ஃபகீம் அஷ்ரப்பிற்குப் பதிலாக லெக் ஸ்பின்னரான உசாமா மிர் அணியில் இடம் பெற்றுள்ளார். ஹசன் அலி 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இரண்டு முறை அரைசதமும் அடித்திருக்கிறார். நான்கு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், கேப்டன் பாபர் அசாம், துணை கேப்டன் ஷதாப் கான், தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் மிஸ்பா-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ், தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து தொழில்நுட்ப குழு உறுப்பினர்களில் ஒருவரான முகமது ஹபீஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலக முடிவு செய்தேன். கவுரவ உறுப்பினராக பணியாற்றினேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஜகா அஷ்ரஃப்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது நேர்மையான ஆலோசனைகள் ஜகா அஷ்ரஃப்பிற்கு தேவைப்படும் போதெல்லாம் நான் எப்போதும் இருப்பேன். எப்போதும் போல் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.