பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவரும் நிலையில், இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது. 

3வது டெஸ்ட் வரும் 21ம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. கடைசி டெஸ்ட்டுக்கான பாகிஸ்தான் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. 

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நன்றாக ஆடியது. பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில், அந்த அணி அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாததால் தோல்வியடைந்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் அந்த அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபித் அலி மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. மழையால் அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸே முழுமையாக முடியவில்லை. அதனால் அந்த போட்டி டிரா ஆனது. மழை பெய்யாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து தான் வென்றிருக்கும். 

முதல் போட்டியில் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மட்டும் இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டு ஃபவாத் ஆலம் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஆடினார். ஆனால் அந்த வாய்ப்பை ஃபவாத் ஆலம் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இந்த அரிய வாய்ப்பை வீணடித்த  அவர் டக் அவுட்டானார். வெறும் நான்கே பந்தில் டக் அவுட்டானார். மான்செஸ்டர் ஆடுகளத்தில் பந்து டர்ன் ஆகாது என்பதால், ஸ்பின்னர் ஷதாப் கான் நீக்கப்பட்டு, பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் சொதப்பினார் ஃபவாத் ஆலம். 

சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து பெரிதாக ஸ்பின் ஆகாது என்பதால், இரண்டாவது டெஸ்ட்டில் ஃபவாத் ஆலமை சேர்க்க வேண்டும் என்று வாசிம் அக்ரமே கூட வலியுறுத்தியிருந்தார். அதேபோலவே அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல், இரண்டாவது டெஸ்ட்டில் சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் பந்து ஸ்பின்னும் ஆனது. 

எனவே கடைசி போட்டியில் ஃபவாத் ஆலம் நீக்கப்பட்டு, ஷதாப் கானே மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரிதினும் அரிதாகத்தான் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கம்பேக் சான்ஸ் கிடைக்கும். ஆனால் அப்படி கிடைத்த வாய்ப்பை அசால்ட்டாக தவறவிட்டார் ஃபவாத் ஆலம். 

ஷதாப் கான் வெறும் ஸ்பின்னர் மட்டுமல்லாது, நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய பேட்ஸ்மேனும் கூட. முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடி ஸ்கோரும் செய்தார். எனவே கடைசி போட்டியில் ஃபவாத் ஆலம் நீக்கப்பட்டு ஷதாப் கான் சேர்க்கப்படுவார்.