உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முழுக்க முழுக்க ஒருசார்பான போட்டியாக அமைந்தது. ஆட்டத்தின் எந்த சூழலிலும் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தவேயில்லை. தொடர்ந்து இரண்டு ஒருநாள் தொடர்களில் ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள ஒரு வெற்றி தேவைப்பட்டது. அந்தவகையில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே பாகிஸ்தான் அணி சொதப்பியது. போட்டி முழுவதுமே வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பறித்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் யாருமே சோபிக்கவில்லை. ஃபகார் ஜமான் அதிரடியாக தொடங்கினார். அவரை தவிர்த்து பாபர் அசாமும் ஹஃபீஸும் மட்டுமே ஓரளவிற்கு போராடிப்பார்த்தனர். மற்ற அனைவருமே வெஸ்ட் இண்டீஸிடம் சரணடைந்தனர். 

ஒருமுனையில் முகமது ஹஃபீஸ் களத்தில் நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தது. வெறும் 105 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாக, 106 ரன்கள் என்ற இலக்கை ஒரு இலக்காகவே மதிக்காத வெஸ்ட் இண்டீஸ் அணி, கெய்லின் அதிரடியால் 14வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் பலமுறை ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்த அனுபவம் கொண்டவர் ஷோயப் மாலிக். 20 ஆண்டுகளாக ஆடிவரும் மாலிக்கிற்கு இதுபோன்ற போட்டிகளை எப்படி எடுத்துச்செல்ல வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே அவர் அணியில் இருந்திருந்தால் பாகிஸ்தான் அணி ஓரளவிற்கு நல்ல ஸ்கோரை எட்டியிருக்கக்கூடும். ஏனென்றால் நெருக்கடிகளை சமாளித்து ஆடும் திறனும் ஆடிய அனுபவமும் பெற்றவர் அவர். ஆனால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் இடமளிக்கப்படவில்லை.