தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானும் 2வது போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வெற்றி பெற்றதையடுத்து தொடர் 1-1 என சமனடைந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடந்துவருகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டி காக், ரபாடா, நோர்க்யா ஆகியோர் ஐபிஎல்லில் ஆட சென்றுவிட்டதால், அவர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை. வாண்டெர் டசனும் கடைசி போட்டியில் ஆடவில்லை. முக்கியமான வீரர்கள் ஆடாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்பு.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமானும் இமாம் உல் ஹக்கும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 112 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த இமாம் உல் ஹக் 57 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஃபகர் ஜமான் சதமடித்தார். 

கடந்த போட்டியில் 193 ரன்களை குவித்த ஃபகர் ஜமான், இந்த போட்டியிலும் சதமடித்தார். ஆனால் 101 ரன்னிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது நவாஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடிய பாபர் அசாம் அரைசதம் அடித்தார். டெத் ஓவர்களில் அவருடன் இணைந்து ஹசன் அலி அதிரடியாக ஆடி 4 சிக்ஸர்களை விளாச, பாபர் அசாமும் அடித்து ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் 82 பந்தில் 94 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 50 ஓவர் முடிவில் 320 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணி, 321 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.