பாகிஸ்தானை வெளியே தள்ளிய இங்கிலாந்து! அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து மோதல் உறுதியானது!
பாகிஸ்தான் வெளியேறியதால் நியூசிலாந்து 2023 உலகக் கோப்பையின் நான்காவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பையின் 44வது லீக் போட்டியில், இங்கிலாந்து 102 ரன்களைக் கடந்ததால், பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து, 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களைக் குவித்தது. 338 ரன்கள் என்ற கடின இலக்கை சேஸ் செய்ய களம் இறங்கிய பாகிஸ்தான் தொக்க ஆட்டக்காரர்களை சொற்ப ரன்களில் இழந்து தடுமாற்றத்துடன் ஆரம்பித்துள்ளது. இதனால், கிரிக்கெட் கணக்கிடுகளின்படி பாகிஸ்தான் அரையிறுதிக்கு வாய்ப்பை இழந்து வெளியேறுவது உறுதி ஆகிவிட்டது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 287 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பைப் பெற முடியும். இரண்டாவது பேட்டிங் செய்தால், இங்கிலாந்து நிர்ணயிக்கும் எந்த இலக்கையும் 3 ஓவர்களில் செஸ் செய்து வெற்றி பெற வேண்டும்.
இங்கிலாந்து 101 ரன்களை இலக்காக வைத்திருந்தால், பாகிஸ்தான் 2.5 ஓவர்களில், அதாவது 17 பந்துகளில் இலக்கை எட்ட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. 17 பந்துகளிலும் சிக்ஸர் அடித்தால்தான் 102 ரன்களை எட்ட முடியும். இதையெல்லாம் நடப்பது சாத்தியமே இல்லை என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் முன்கூட்டியே பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்லாது என்று முடிவு செய்துவிட்டனர்.
இதன் விளைவாக, நியூசிலாந்து 2023 உலகக் கோப்பையின் நான்காவது அணியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைப் போல இந்த முறையும் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன. இந்தப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 15 புதன்கிழமை நடைபெறவுள்ளது.
நவம்பர் 16ஆம் தேதி வியாழன் அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நவம்பர் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.