நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிய பாகிஸ்தான் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆகி மரண அடி வாங்கியது. முதல் டெஸ்ட்டில் 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பாகிஸ்தான் அணி, 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

2 டெஸ்ட்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. 2 போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சொதப்பிய பாகிஸ்தான் அணியை ரசிகர்கள், வசைபாடிவருகின்றனர்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான படுதோல்விக்கு பிறகு அதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், நாங்கள் ஆடிய விதத்திற்கு நாங்கள் வசைகளுக்கு தகுதியானவர்கள். மக்கள் எங்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கும்போது, சரியாக ஆடவில்லையென்றால், திட்டத்தான் செய்வார்கள். 

முதல் டெஸ்ட்டில் எங்கள் வீரர்கள் போராடிய விதம் சிறப்பானது. 2வது டெஸ்ட்டிலும் எங்களிடமிருந்து அதே மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தொடரில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் நாங்கள் அதை செய்யவில்லை. எங்கள் அணியின் ஃபீல்டிங்கை மேம்படுத்த வேண்டும் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார்.