Pakistan vs Australia: நாள்தோறும் ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுகிறோம் – கேப்டன் ஷதாப் கான் ஜாலியான பேச்சு!
ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுவதால், பீல்டிங்கில் கொஞ்சம் மந்தமாக இருந்ததாக பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் கான் கூறியுள்ளார்.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பைக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. பாபர் அசாம் முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இதுவரையில் நடந்த 2 வார்ம் அப் போட்டிகளிலும் பாகிஸ்தா மோசமான தோல்வியை தழுவியது.
நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி வார்ம் அப் போட்டியில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. பீல்டிங் செய்ய இருவரும் வரவில்லை. ஆனால், பேட்டிங் ஆடினர். பாபர் அசாமிற்குப் பதிலாக ஷதாப் கான் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் நிகழ்வின் போது பேசிய ஷதாப் கான் கூறியிருப்பதாவது: பாபர் அசாமிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. நாங்கள் ஒரே குடும்பமாக தான் இருக்கிறோம்.
நாங்கள் நண்பர்களாக ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்கின்றோம். வெற்றி பெற்றாலும் ஒரே அணியாக வெல்வோம். தோற்றாலும் ஒரே அணியாக தோற்போம். வெற்றி பெறும் பழக்கத்தை கற்றுக் கொள்ள விரும்புகிறோம் என்று கூறினார். டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுத்தார். கேமரூன் க்ரீன் 50 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் ஹரிஷ் ராஃப் 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றி 97 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார்.
World Cup Free Tickets: உலகக் கோப்பையில் 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட், உணவு வழங்க முடிவு!
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்து 14 ரன்களில் தோல்வியை தழுவியது. இதில், இப்திகார் அகமது 83 ரன்களும், பாபர் அசாம் 90 ரன்களும், முகமது ரிஸ்வான் 50 ரன்களும் எடுத்தனர். தோல்விக்குப் பிறகு பேசிய ஷதாப் கான் கூறியிருப்பதாவது: ஹைதராபாத் வந்தது முதல் தினந்தோறும் ஹைதராபாத் பிரியாணி தான் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக மந்தமாக இருக்கிறோம். வார்ம் அப் போட்டிகளில் முடிவு பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. வார்ம் அப் போட்டிகள் மூலமாக வீரர்களுக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடும் போது வீரர்களின் மன உறுதி அதிகரிக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.