வில்வித்தையில் இந்தியாவிற்கு முதல் தங்கம் - ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடிக்கு கிடைத்த வெற்றி!
ஆசிய விளையாட்டு 2023ல் இன்று நடந்த வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடி தங்கம் கைப்பற்றியுள்ளனர்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இன்று வில்வித்தை போட்டி நடந்தது. வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஜோடி, தென் கொரியாவின் சோ சேவோன் மற்றும் ஜூ ஜேஹூன் ஜோடியை 159 -158 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலமாக வில்வித்தையில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கமாகும்.
மற்றொரு போட்டியில் தடகள வீரர்கள் ராம் பாபூ மற்றும் மஞ்சு ராணி ஆகியோர் 35 கிமீ ரேஸ்வாக்கில் வெண்கல பதக்கத்தை வென்றனர் (கலப்பு அணி). இதன் மூலமாக இந்தியா 16 தங்கம் 26 வெள்ளி மற்றும் 29 வெண்கலம் கைப்பற்றி 71 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. சீனா, 164 தங்கம் 90 வெள்ளி மற்றும் 46 வெண்கலத்துடன் 300 பதக்கங்களுடன் நம்பர் 1 இடத்திலுள்ளது.