சச்சின் டெண்டுல்கர் தான் இந்தியாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஆல்டைம் சர்வதேச கிரேட் பேட்ஸ்மேன். சச்சின், தோனி, கோலி ஆகியோருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் இவர்களது ரசிகர்களெல்லாம், அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அந்தந்த நேரத்தில் சிறந்த பேட்ஸ்மேன்களின் ரசிகர்களாக மாறக்கூடும்.

ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே காலத்தால் மாறாத நிரந்தர மற்றும் வெறித்தனமான ரசிகர்களை பெற்றவர் கங்குலி என்றால் மிகையாகாது. கங்குலியை ஒரு பேட்ஸ்மேன் என்பதை கடந்து, அவரது கேப்டன்சி, களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள், டைமிங்கில் பதிலடி கொடுக்கும் திறமை ஆகியவற்றால் கவரப்பட்ட தீவிரமான மற்றும் நிரந்தர ரசிகர்களை பெற்றுள்ளார் கங்குலி. 

அந்தவகையில் கங்குலியின் வெறித்தனமான ரசிகர், தான் என்பதை இளம் வீரர் நிதிஷ் ராணா வெளிப்படுத்தியுள்ளார். தனது சிறுவயதில், கிரிக்கெட் பார்க்கும்போது கங்குலி அவுட்டாகிவிட்டாலே மணிக்கணக்கில் அழுவாராம்.. இந்த தகவலை அவரே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள நிதிஷ் ராணா, நாங்கள் குடும்பத்துடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது வழக்கம். எனது சகோதரர் ராகுல் டிராவிட் ரசிகர். எனது தந்தை சச்சின் டெண்டுல்கரின் ரசிகர். நான் கங்குலி ரசிகன். கங்குலி அவுட்டாகும்போதெல்லாம் எனது தந்தை என்னிடம் ஏதாவது சொல்வார். என்னால் கங்குலி அவுட்டாவதை தாங்கிக்கொள்ளவே முடியாது. கங்குலி ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும், அறைக்குள் ஓடிச்சென்று கதவை மூடிக்கொண்டு மணிக்கணக்கில் அழுவேன் என்று நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.

நிதிஷ் ராணாவும் கங்குலியை போலவே இடது கை பேட்ஸ்மேன் என்பதால், அவர் மீதான ஈர்ப்பு அதிகமாக இருந்திருக்கலாம். நிதிஷ் ராணா, உள்நாட்டு போட்டிகளிலும் ஐபில்லிலும் சிறப்பாக ஆடிவருகிறார். ஆனால் அவருக்கு இன்னும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஐபிஎல்லில் 2014லிருந்து 2017 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய நிதிஷ் ராணா, 2018லிருந்து கேகேஆர் அணியில் ஆடிவருகிறார்.