IPL 2023: நிகோலஸ் பூரன் அதிரடி அரைசதம்.. கௌதம் செம ஃபினிஷிங்! KKR-க்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது லக்னோ அணி
கேகேஆருக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, நிகோலஸ் பூரனின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 176 ரன்கள் அடித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோ அணி நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய 2 இடங்களுக்கு லக்னோ, மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
15 புள்ளிகளை பெற்றுள்ள லக்னோ அணி, பிளே ஆஃபிற்கு முன்னேற கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கேகேஆரை எதிர்கொண்டு ஆடிவருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் நிதிஷ் ராணா ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக், கரன் ஷர்மா, பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், க்ருணல் பாண்டியா (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், மோசின் கான்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷையர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக்(28) மற்றும் கரன் ஷர்மா(3) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். பிரெரக் மன்கத் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, க்ருணல் பாண்டியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 26 ரன்களுக்கு அவுட்டானார்.
அதிரடியாக பேட்டிங் ஆடிய நிகோலஸ் பூரன் அரைசதம் அடித்தார். 30 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 58 ரன்களை விளாச, கடைசியில் கிருஷ்ணப்பா கௌதம் 4 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 176 ரன்களை குவித்து, 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது.