Asianet News TamilAsianet News Tamil

உச்சகட்ட பரபரப்பு.. ஷமி அபாரம்.. கடுமையாக போராடிய வில்லியம்சன்.. கடைசி பந்தில் டை ஆன டி20 போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி, உச்சகட்ட பரபரப்பில் கடைசி பந்தில் டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்படுகிறது. 

new zealand vs india third t20 tie and super over for decide match result
Author
Hamilton, First Published Jan 29, 2020, 4:08 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை வகித்த நிலையில், மூன்றாவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆனால் அந்த அதிரடியான தொடக்கத்தை பயன்படுத்தி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், மிடில் ஓவர்களிலும் டெத் ஓவர்களிலும் ஸ்கோர் செய்ய தவறிவிட்டனர். 

ரோஹித்தும் ராகுலும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். 5 ஓவர்களில் இந்திய அணி 42 ரன்கள் அடித்திருந்த நிலையில், பென்னெட் வீசிய 6வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசினார் ரோஹித் சர்மா. ரோஹித்தின் காட்டடியால் அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 27 ரன்கள் கிடைத்தது. ரோஹித்தும் 23 பந்தில் அரைசதம் கடந்தார். 

new zealand vs india third t20 tie and super over for decide match result

முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 89 ரன்களை சேர்த்தது ரோஹித் - ராகுல் ஜோடி. 27 ரன்கள் அடித்திருந்த ராகுல், காலின் டி கிராண்ட் ஹோமின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ரன்ரேட் 10ல் இருந்தது; அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார். எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி எந்தவித டென்ஷனும் இல்லாமல் அடித்து ஆடட்டும் என்பதற்காக ஷிவம் துபே மூன்றாம் வரிசையில் இறக்கப்பட்டார். 

ஆனால் ஷிவம் துபே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் படுமோசமாக சொதப்பியதோடு ரோஹித் மீதான அழுத்தத்தையும் அதிகரித்துவிட்டார். முதல் நான்கு பந்தில் ரன்னே அடிக்காத துபே, ஐந்தாவது பந்தில்தான் சிங்கிளே எடுத்தார். இதனால் ரன்ரேட் குறைய தொடங்கியதும், கொஞ்சம் கூட நிதானிக்கமுடியாமல், அடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ரோஹித் சர்மா, ஒரு தவறான பந்தை அடித்து ஆட்டமிழந்தார். பென்னெட் வீசிய ஸ்லோ டெலிவரியை தூக்கியடித்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரை தொடர்ந்து 7 பந்தில் வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்து துபேவும் நடையை கட்டினார். ஷிவம் துபேவின் மந்தமான பேட்டிங்கால் 10 மற்றும் 11வது ஓவர்களில் ரன்ரேட் குறைந்ததுடன் ரோஹித்தும் அவுட்டானார். துபேவும் சரியாக ஆடாமல் அவுட்டானார். அதன்பின்னர் இந்திய அணியின் ஸ்கோர் எழவேயில்லை. விராட் கோலி ஒருசில பவுண்டரிகளை அடித்தாலும் ஷ்ரேயாஸ் ஐயரும் பெரியளவில் அதிரடியாக ஆடாததால் ஸ்கோர் வெகுவாக குறைந்தது. 

new zealand vs india third t20 tie and super over for decide match result

10வது ஓவர் முதல் 16வது ஓவர் வரையிலான 7 ஓவர்களில் வெறும் 41 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் ஸ்கோர் மிடில் ஓவர்களில் படுமோசமாக குறைந்தது. கடைசி 4 ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய ஷ்ரேயாஸ் ஐயரும் கோலியும் 17 மற்றும் 19வது ஓவர்களில் முறையே ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 16 பந்தில் 17 ரன்களும் கோலி 27 பந்தில் 38 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். மனீஷ் பாண்டேவும் ஜடேஜாவும் கடைசி ஓவரில் தலா ஒரு சிக்ஸர் விளாச, அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து 20 ஓவரில் இந்திய அணி 179 ரன்கள் மட்டுமே அடித்தது. 

சிறிய மைதானமான ஹாமில்டனில் 180 ரன்கள் என்பது பெரிய சவாலான இலக்கு அல்ல. எனவே மிகவும் நம்பிக்கையுடன் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வழக்கம்போலவே தொடக்கம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். கப்டிலும் முன்ரோவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தனர். கப்டில் 31 ரன்னிலும் முன்ரோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கேப்டன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி இந்திய பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். 

new zealand vs india third t20 tie and super over for decide match result

அதிரடியாக ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்ததுடன், அதன்பின்னர் மேலும் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். வழக்கத்திற்கு மாறாக பும்ராவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். பும்ரா வீசிய 17வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார் வில்லியம்சன். 

18வது ஓவரை நன்றாக வீசிய சாஹல் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா வீசிய 19வது ஓவரில் டெய்லரும் வில்லியம்சனும் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்தனர். அந்த ஓவரில் 11 ரன்கள் அடிக்கப்பட்டது. இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த டெய்லர், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். மூன்றாவது பந்தில் வில்லியம்சன் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தை சேஃபெர்ட் அடிக்கவில்லை. இதையடுத்து கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தையும் சேஃபெர்ட் அடிக்கவில்லை. ஆனால் அதற்கு ஒரு ரன் ஓடி எடுத்தனர். போட்டி டை ஆனதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், டெய்லரை போல்டாக்கினார் ஷமி. இதையடுத்து போட்டி டையில் முடிந்தது. போட்டியின் முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios