இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று  இந்திய அணி தொடரை 3-0 என வென்றுவிட்டது. நியூசிலாந்தில் முதன்முறையாக டி20 தொடரை வென்றுள்ள இந்திய அணி, எஞ்சிய 2 போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி 5-0 என ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பிலும் அடுத்த 2 போட்டிகளிலும் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் உள்ளன. 

இந்நிலையில், நான்காவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. ஆறுதல் வெற்றியையாவது பெற்றாக வேண்டிய நிலையில் உள்ள நியூசிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. 

வில்லியம்சன் ஒருவர் தான் அந்த அணிக்காக அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வீரர். அவரும் இந்த போட்டியில் ஆடவில்லை என்றால், அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு. தொடரை வென்றதால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கு கூடுதல் பலம். 

வில்லியம்சன் ஆடாததால் டிம் சௌதி இந்த போட்டிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார். 3வது டி20 போட்டியில் வில்லியம்சன் அபாரமாக ஆடி 48 பந்துகளில் 95 ரன்களை குவித்தும் கூட அந்த அணியால் அந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. வில்லியம்சனை தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் தோல்வியை தழுவியது. சூப்பர் ஓவரை படுமோசமாக வீசி, கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை கொடுத்த டிம் சௌதி தான் இந்த போட்டிக்கு கேப்டனாக செயல்படவுள்ளார். வெற்றிக்காக போராடிய கேப்டன் ஆடாத சூழலில், வெற்றியை தாரைவார்த்த டிம் சௌதி கேப்டனாக செயல்படவுள்ளார்.