இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தில் காற்று கடுமையாக இருப்பதால், அதை பயன்படுத்தி நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர்கள், எக்ஸ்ட்ரா பவுன்ஸர்களுடன் வீசி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தனர். 

நியூசிலாந்தின் சவாலான கண்டிஷன் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆகிய இரண்டையும் ஒருசேர சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 46 ரன்கள் அடித்தார். மயன்க் அகர்வால் 34 ரன்கள் அடித்தார். இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில், சுவாரஸ்யமான மற்றும் பார்ப்பதற்கு காமெடியான சம்பவம் ஒன்று நடந்தது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் இன்னிங்ஸின்போது, 46வது ஓவரில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் தொப்பி காற்றில் பறந்தது. காற்றில் பறந்த தொப்பியை விரட்டி வில்லியம்சன் ஓட, தொப்பியோ காற்றில் பவுண்டரி லைனுக்கு சென்றது. ஃபீல்டிங்கில் பந்தை விரட்டுவதுபோலவே தொப்பியை விரட்டி ஓடினார் வில்லியம்சன். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.