நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் ரோஸ் டெய்லரை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. டெய்லர் மட்டுமே 86 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 267 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 18 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள், இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பினர். வாட்லிங் மட்டுமே பொறுப்புடன் ஆடி 77 ரன்களை குவித்து நியூசிலாந்து அணியை காப்பாற்றினார். அவரும் 77 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சோமர்வில்லி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் அடித்தார். நான்காம் நாள் உணவு இடைவேளைக்கு முன், நியூசிலாந்து அணி 285 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இலங்கை அணி 268 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. நான்காம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு பின், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இலங்கை அணி. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் அடித்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி இன்னிங்ஸில் 268 ரன்கள் என்பது இலங்கை அணிக்கு சவாலான இலக்குதான். ட்ரெண்ட் போல்ட், அஜாஸ் படேல், டிம் சௌதி ஆகியோரை சமாளித்து ஆடி இந்த இலக்கை அடிப்பது இலங்கை அணிக்கு சவாலான விஷயம்.