Asianet News TamilAsianet News Tamil

நியூசிலாந்திடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து.. இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வின் பண்ண வில்லியம்சன்&கோ

நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 
 

new zealand innings win against england in first test and second place in icc test championship
Author
Mount Maunganui, First Published Nov 25, 2019, 10:17 AM IST

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும், இந்திய அணி வங்கதேசத்தையும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்ட நிலையில், நியூசிலாந்து அணியும் இங்கிலாந்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வாட்லிங்கின் இரட்டை சதம், சாண்ட்னெரின் அருமையான சதம் மற்றும் கிராண்ட் ஹோமின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் அடித்தது. 

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராவலும் லேதமும் ஏமாற்றமளித்தனர். இருவரும் சொற்ப ரன்களில ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ரோஸ் டெய்லர் 25 ரன்களிலும் ஹென்ரி நிகோல்ஸ் 41 ரன்களிலும் என முக்கியமான வீரர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அவுட்டாகி வெளியேறினர்.

பின்னர் வாட்லிங்கும் கோலின் டி கிராண்ட் ஹோமும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆறாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 119 ரன்களை சேர்த்தனர். டி கிராண்ட் ஹோம் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வாட்லிங் சதத்தை கடந்தார். 

new zealand innings win against england in first test and second place in icc test championship

டி கிராண்ட் ஹோமின் விக்கெட்டுக்கு பிறகு வாட்லிங்குடன் ஜோடி சேர்ந்த மிட்செல் சாண்ட்னெரும் சிறப்பாக ஆடினார். வாட்லிங் - சாண்ட்னெர் ஜோடியை இங்கிலாந்து பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். சாண்ட்னெரும் சதமடிக்க, வாட்லிங் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 

வாட்லிங் - சாண்ட்னெர் ஜோடி, ஏழாவது விக்கெட்டுக்கு 261 ரன்களை குவித்தது. இந்த ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி மெகா ஸ்கோரை அடித்தது. முதல் இன்னிங்ஸை 615 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. 

262 ரன்கள் பின் தங்கிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் முடிய கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. நான்காம் நாள் ஆட்டம் முடிவடைய இருந்ததால், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் மிகவும் நிதானமாக ஆடினர். ஆனாலும் தொடக்க வீரர் டோமினிக் சிப்லியை 12 ரன்களில் சாண்ட்னெர் வெளியேற்றினார். 

இதையடுத்து ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேக் லீச் ஆகிய இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். அதனால் நான்காம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து அணி. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோ டென்லி, பட்லர் ஆகியோரால் போட்டியை டிரா செய்யுமளவிற்கு நாள் முழுதும் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. இவர்கள் அனைவரையுமே சீரான இடைவெளியில் நியூசிலாந்து பவுலர்கள் வீழ்த்திவிட்டனர். 

new zealand innings win against england in first test and second place in icc test championship

இங்கிலாந்து அணி 138 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்களை சேர்த்தார். சாம் கரனுடன் இணைந்து ஆர்ச்சர் நன்றாக ஆடினார். ஆனால் அவர் 30 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக ஸ்டூவர்ட் பிராடும் ஆட்டமிழக்க, 197 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios