Asianet News TamilAsianet News Tamil

New Zealand vs Bangladesh: பேட்டிங்கில் லேதம், பவுலிங்கில் போல்ட்! பட்டைய கிளப்பிய நியூசி., பம்மிய பங்களாதேஷ்

நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 521 ரன்களை குவிக்க, வங்கதேச அணி வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது. 
 

new zealand declares first innings for 521 runs and bangladesh all out for just 126 runs in second test
Author
Christchurch, First Published Jan 10, 2022, 12:44 PM IST

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று டெஸ்ட் சாம்பியனாக திகழும் நியூசிலாந்து அணி, சொந்த மண்ணில் வங்கதேசத்திடம் முதல் டெஸ்ட்டில் படுதோல்வி அடைந்தது.

இது நியூசிலாந்து அணிக்கு மரண அடியாக விழுந்தது. எனவே 2வது டெஸ்ட்டில் அந்த மரண அடிக்கு பதிலடி கொடுக்கும் தீவிரத்தில் களம் கண்டது நியூசிலாந்து அணி. கிறிஸ்ட்சர்ச்சில் ஜனவரி 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். வில் யங் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டாம் லேதமும் டெவான் கான்வேவும் இணைந்து மிகச்சிறப்பாக விளையாடினர். சதமடித்த லேதம் இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் லேதம் 186 ரன்களுடனும், கான்வே 99 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை குவித்திருந்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதும், சதமடித்த கான்வே 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை பூர்த்தி செய்த டாம் லேதம் 252 ரன்களை குவித்தார். ரோஸ் டெய்லர் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். டாம் லேதம் மற்றும் டெவான் கான்வேவின் அபாரமான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 521 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச வீரர்கள் டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதியின் பவுலிங்கில் மளமளவென ஆட்டமிழந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக யாசிர் அலி 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நூருல் ஹசன் 41 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் அல்லது ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, வெறும் 126 ரன்களுக்கு சுருண்டது. டிரெண்ட் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தினார்.

ஃபாலோ ஆன் பெற்று 3ம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸை தொடரும் வங்கதேச அணி, கண்டிப்பாக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துவிடும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios