அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்களை விளாசி வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி ஹாரி டெக்டாரின் அதிரடி சதத்தால்(113) 50 ஓவரில் 300 ரன்களை குவித்தது.
301 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியில் மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்ப, மைக்கேல் பிரேஸ்வெல் மட்டும் அதிரடியாக ஆடி சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். பிரேஸ்வெல் 83 பந்தில் 127 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்களை விளாசி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிக ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து படைத்துள்ளது.
