இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது.

முதல் 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என தொடரை வென்ற நிலையில், நான்காவது போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. கடைசி போட்டி பிப்ரவரி 2ம் தேதி நடக்கவுள்ளது. சொந்த மண்ணில் முதல் முறையாக இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்கள் இல்லாதது அந்த அணிக்கு பேரிழப்பு. டிரெண்ட் போல்ட் மற்றும் ஃபெர்குசன் ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் அணியிலும் இடம்பெறவில்லை. மாட் ஹென்ரியும் முழு உடற்தகுதியுடன் இல்லாததால் அவரும்  ஒருநாள் அணியில் இல்லை. டிரெண்ட் போல்ட் அணியில் ஆட முடியாத சூழலில், இந்தியா ஏ அணிக்கு எதிராக ஆடிய கைல் ஜேமிசன் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து சீனியர் அணியில் முதல்முறையாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜேமிசன் இந்தியா ஏ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளையும் மற்றொரு போட்டியில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஜேமிசனின் உயரம் 6 அடி 8 இன்ச். நியூசிலாந்தின் உயரமான கிரிக்கெட் வீரர் இவர் தான். இவர் ஃபாஸ்ட் பவுலர் என்பதால், இவரது உயரம் இவருக்கு மிகப்பெரிய பலம். 

ஃபாஸ்ட் பவுலர்கள் டிம் சௌதி, குஜ்ஜெலின், பென்னெட் ஆகியோர் உள்ளனர். டிம் சௌதி ஏற்கனவே டி20 போட்டியில் இந்திய வீரர்களிடம் மரண அடி வாங்கியுள்ளார். அதேபோல பென்னெட்டின் பவுலிங்கையும் இந்திய வீரர்கள் வெளுத்து எடுத்துள்ளனர். எனவே இந்திய அணியை கட்டுப்படுத்தக்கூடிய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் நியூசிலாந்திடம் இல்லை.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஒருநாள் அணியில், அதிரடி ஆல்ரவுண்டர்கள் காலின் டி கிராண்ட் ஹோம், ஜிம்மி நீஷம் ஆகியோர் உள்ளனர். ஸ்பின்னர் இஷ் சோதி முதல் போட்டிக்கான அணியில் மட்டும் உள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), மார்டின் கப்டில், ஹென்ரி நிகோல்ஸ், ரோஸ் டெய்லர், டாம் லேதம்(விக்கெட் கீப்பர்), டாம் பிளண்டெல், காலின் டி கிராண்ட் ஹோம், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, குஜ்ஜெலின், பென்னெட், கைல் ஜேமிசன்.