பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் எந்த வீரருமே அரைசதம் அடிக்கவில்லை. யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், அந்த அணி 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்தது. 

ஷதாப் கான் மட்டுமே அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். ஷாஃபிக் மற்றும் ஹஃபீஸ் ஆகிய இருவரும் டக் அவுட்டானார்கள். குஷ்தில், இமாத் வாசிம், ரிஸ்வான் ஆகியோர் பதின்களில் ஆட்டமிழந்தனர். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால், 20 ஓவரில் பாகிஸ்தான் அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

154 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் ஆறு ரன்களுக்கும் 3ம் வரிசையில் இறங்கிய கான்வே ஐந்து ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான டிம் சேஃபெர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, நியூசிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.  சேஃபெர்ட் அமைத்து கொடுத்த அடித்தளத்தால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.