நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது. 

நெதர்லாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடியது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

ஹாமில்டனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான மார்டின் கப்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில் யங்கும் அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

கப்டில், வில் யங் ஆகிய இருவருமே சதமடிக்க, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 203 ரன்களை குவித்தனர். கப்டில் 106 ரன்களையும், வில் யங் 120 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரின் அபாரமான சதங்கள் மற்றும் பின்வரிசையில் டாம் லேதம், பிரேஸ்வெல் ஆகியோரின் சிறிய கேமியோவாலும் 50 ஓவரில் 333 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து 334 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் ஸ்டீஃபன் மைபர்க் நன்றாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அவர் 64 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாருமே நன்றாக ஆடவில்லை. நெதர்லாந்து வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 43வது ஓவரில் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நெதர்லாந்து அணி.

115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3-0 நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.