இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரஹானே மற்றும் மயன்க் அகர்வால் மட்டுமே முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடினர். ரஹானே அதிகபட்சமாக 46 ரன்களும் அகர்வால் 34 ரன்களும் அடித்தனர். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாருமே இந்தளவிற்குக்கூட ஆடவில்லை. கோலி, புஜாரா ஆகிய அனுபவ நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், பிரித்வி ஷா ஆகியோரும் சோபிக்காததால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. 

நியூசிலாந்து அணியில் அறிமுகமான கைல் ஜாமிசன் மற்றும் அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டிம் சௌதி ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். டெய்லர் 44 ரன்களும் வில்லியம்சன் 89 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங் ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினர் இந்திய பவுலர்கள். அதன்பின்னர் டிம் சௌதியையும் 6 ரன்னில் இஷாந்த் சர்மா அனுப்பிவைத்தார். 

இதையடுத்து 225 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் இந்திய அணி கோட்டைவிட்டது. 8வது விக்கெட்டுக்கு டி கிராண்ட் ஹோமுடன் ஜோடி சேர்ந்த கைல் ஜாமிசன், சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக பேட்டிங் ஆடிய அவர், 45 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து 9வது விக்கெட்டாக டி கிராண்ட் ஹோம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசி வீரராக களத்திற்கு வந்த டிரெண்ட் போல்ட் கூட சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடிய போல்ட் வெறும் 24 பந்தில் 38 ரன்களை நியூசிலாந்து அணிக்கு சேர்த்து கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்தது. ஜாமிசன் மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய 2 பவுலர்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்த்தது இந்திய அணி. அதன்விளைவாக, அந்த அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில், இந்த முறையும் பிரித்வி ஷா, கோலி, புஜாரா ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஆனால் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த மயன்க் அகர்வால், 58 ரன்களில் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ரஹானேவும் ஹனுமா விஹாரியும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி, மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்தனர். 

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் அடித்திருந்தது. நான்காம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியவுடனேயே ரஹானே 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே ஹனுமா விஹாரியும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் அடுத்த 43 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 25 ரன்கள் அடித்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சரியாக பேட்டிங் ஆடாமல் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்தின் சீனியர் பவுலர் டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து வெறும் 9 ரன்கள் என்ற இலக்கை, நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் வெறும் 10 பந்தில் அடித்தனர். இதையடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் வலுவான நியூசிலாந்து அணி, இந்திய அணியை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காமல் அசால்ட்டாக வீழ்த்தி அபாரமான வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 60 புள்ளிகளை பெற்று, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 120 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்தில் உள்ளது. 

இது நியூசிலாந்து அணியின் 100வது டெஸ்ட் வெற்றி ஆகும். 441வது டெஸ்ட் போட்டியில் 100வது வெற்றி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது நியூசிலாந்து அணி.