Asianet News TamilAsianet News Tamil

டேரைல் மிட்செல் அதிரடி அரைசதம்.. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது நியூசிலாந்து

டேரைல் மிட்செலின் அதிரடியான பேட்டிங்கால் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
 

new zealand beat england by 5 wickets in t20 world cup semi final and qualifies for final
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 10, 2021, 11:33 PM IST

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி அபுதாபியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியில் கட்டாயத்தின் பேரில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயத்தால் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். ஜோஸ் பட்லருடன் ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக களமிறங்கி ஆடினார்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், மொயின் அலி, ஒயின் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், மார்க் உட், அடில் ரஷீத்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 17 பந்தில் வெறும் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் செம ஃபார்மில் அதிரடியாக ஆடிவரும் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 29 ரன்னுக்கு இஷ் சோதியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் டேவிட் மலானும் மொயின் அலியும் இணைந்து பொறுப்புடன் ஆடி 3வது விக்கெட்டுக்கு 63 ரன்களை சேர்த்து கொடுத்தனர். டேவிட் மலான் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் 10 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 17 ரன்கள் அடித்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய மொயின் அலி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார் மொயின் அலி. இதையடுத்து 20 ஓவரில் 166 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி,

167 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் 3 பந்தில் 4 ரன்கள் மட்டுமே அடித்து முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன் 11 பந்தில் 5 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

13 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்து அணிக்கு டேரைல் மிட்செலும் டெவான் கான்வேவும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 82 ரன்களை குவித்து கொடுத்தனர். சிறப்பாக விளையாடிய கான்வே 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் டேரைல் மிட்செல் அரைசதம் அடித்தார்.

ஃபிலிப்ஸ் ஆட்டமிழந்த பிறகு களத்திற்கு வந்த ஜிம்மி நீஷம், 11 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்களை விளாசி ஒரு நல்ல கேமியோ பங்களிப்பு செய்தார். 18வது ஓவரின் கடைசி பந்தில் நீஷம் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19வது ஓவரில் டேரைல் மிட்செல் 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, 20 ரன்களையும் அந்த ஒரே ஓவரில் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது. டேரைல் மிட்செல் 47 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்றார்.

நாளை துபாயில் நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் மோதும் நிலையில், அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 14ம் தேதி துபாயில் நடக்கும் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios