ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணியும் அரையிறுதியில் நுழைந்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறுகின்றன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இன்று நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து அணி வங்கதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் தனது இடத்தை உறுதி செய்தது. இந்த வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளின் அரையிறுதிக்கு முன்னேறும் கனவு தகர்ந்தது. 237 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து போட்டியை வென்றனர்.
காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பெற்ற ரச்சின் ரவீந்திரா 105 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து அற்புதமான சதம் அடித்தார். அவரது இன்னிங்ஸில் 12 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் வந்தன. அவர் தனி ஒருவராக போட்டியின் போக்கையே மாற்றினார், அணி அரையிறுதிக்கு தகுதி பெறவும் உதவினார். இதன் மூலம் நியூசிலாந்துடன் இந்திய அணியும் இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ராவல்பிண்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங்கில் அந்த அணியின் கேப்டன் சாண்டோ அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தவிர, ஜாகர் அலி 45, ரிஷாத் உசேன் 26, தன்ஜித் ஹசன் 24, மெஹ்தி ஹசன் மிராஸ் 13, தஸ்கின் அகமது 10, ஹிருதய் 7, ரியாத் 4, ரஹீம் 2 ரன்கள் எடுத்தனர். பந்துவீச்சில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில்லியம் ஓ'ரூர்க் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இது தவிர, மேட் ஹென்றி மற்றும் கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
237 ரன்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, ரச்சின் ரவீந்திராவின் அபார சதத்தின் துணையுடன் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது. ரவீந்திராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லாதம் 55 ரன்கள் எடுத்தார். டெவோன் கான்வே 30, கிளென் பிலிப்ஸ் 21, மைக்கேல் பிரேஸ்வெல் 11, கேன் வில்லியம்சன் 5 ரன்கள் எடுத்தானர். வங்கதேசம் தரப்பில் டஸ்கின் அகமது, நஹித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
