ஐபிஎல் 15வது சீசனில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், காலங்காலமாக சிஎஸ்கேவிற்காக ஆடி பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் எடுத்துவர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர். 

ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி, நடப்பு 15வது சீசனுக்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகினார். இதையடுத்து புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் ஆடிவருகிறது.

ஐபிஎல் 15வது சீசன் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு நல்ல தொடக்கமாக அமையவில்லை. முதல் 3 போட்டிகளிலுமே படுதோல்வி அடைந்தது. கேகேஆர் அணிக்கு எதிராக தோற்ற சிஎஸ்கே அணி, அதைத்தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிடமும் தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக நேற்று ஆடிய 3வது போட்டியிலும், 181 ரன்கள் என்ற இலக்கை விரட்ட முடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாகவும், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக ஆடிய சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்தார். தோனியை தல என்று அன்புடன் அழைத்த ரசிகர்கள், அவரது தளபதியாக திகழ்ந்த ரெய்னாவை சின்ன தல என அழைத்தனர். சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாகவும், நட்சத்திர வீரராகவும், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த சுரேஷ் ரெய்னா, 2020 ஐபிஎல்லில் அணி நிர்வாகத்துடனான சிறிய மனக்கசப்பால் அந்த சீசனில் ஆடவில்லை. அதன்பின்னர் 2021 ஐபிஎல்லிலும் சரியாக ஆடவில்லை.

இதையடுத்து அவரை 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் விடுவித்த சிஎஸ்கே அணி, ஏலத்திலும் அவரை எடுக்க முன்வரவில்லை. அடிப்படை விலைக்குக்கூட ரெய்னாவை எடுக்க எந்த அணியும் முன்வராத நிலையில், சிஎஸ்கே அணியும் அவரை எடுக்கவில்லை. அதனால், ஒருகாலத்தில் ஐபிஎல்லின் சாம்பியனாக இருந்த ரெய்னா, இந்த சீசனில் வர்ணனை செய்துவருகிறார்.

இந்நிலையில், சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்துவருவதால், ரெய்னாவை மீண்டும் அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று டுவிட்டரில் ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…