டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நெதர்லாந்து ஆறுதல் வெற்றி
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருந்தாலும், புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது.
இந்த உலக கோப்பையில் தகுதிசுற்றில் அபாரமாக விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதிபெற்றன. ஜிம்பாப்வே அணி அரையிறுதிக்கு முன்னேறமுடியாது என்றாலும், பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. அந்த நம்பிக்கையுடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. சூப்பர் 12 சுற்றின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரைவிட்டு வெளியேறிவிட்ட நெதர்லாந்து அணி கடைசி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரேயொரு வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கியது.
அடிலெய்டில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே அணி:
வெஸ்லி மாதவெர், கிரைக் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சத்தாரா, ரிச்சர்ட், ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.
நெதர்லாந்து அணி:
ஸ்டீஃபன் மைபர்க், மேக்ஸ் ஓடௌட், டாம் கூப்பர், காலின் ஆக்கர்மேன், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாண்டர் மெர்வி, லோகன் வான் பீக், ஃப்ரெட் க்ளாசன், பால் வான் மீகரன், பிரண்டன் க்லோவர்.
முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 24 பந்தில் 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் ராசா. வில்லியம்ஸ் 23 பந்தில் 28 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே ஒற்றை இலக்கம் அல்லது ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 19.2 ஓவரில் வெறும் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.
118 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணியில் தொடக்க வீரர் ஓடௌட் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ஓடௌட் 52 ரன்கள் அடிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய டாம் கூப்பர் 32 ரன்கள் அடிக்க, 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றில் ஒரு வெற்றியை பெற்றுள்ளது. கடைசி போட்டியில் எப்படியும் இந்தியாவிடம் தோற்றுவிடும் நெதர்லாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்துள்ளது.