இந்திய ஒருநாள் அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்துவந்த நிலையில், டெஸ்ட் அணியில் டாப் ஆர்டர் சிக்கல் உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக கடந்த சில ஆண்டுகளாக ஆடிவரும் கேஎல் ராகுல், அண்மைக்காலமாக சரியாக ஆடவில்லை. 

ஆஸ்திரேலிய தொடரில் சோபிக்காத ராகுல், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் படுமோசமாக சொதப்பினார். ராகுல் சொதப்பினாலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அதை பயன்படுத்தி கொள்ளாமல் தொடர்ச்சியாக சொதப்பிக்கொண்டே இருந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அனைத்து இன்னிங்ஸ்களிலும் ஆடினார். மொத்தமாக 4 இன்னிங்ஸ்களில் ஆடிய ராகுல், வெறும் 101 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரால் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க முடியவில்லை. அது அவருக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் பெரிய சிக்கலாகவும் பாதிப்பாகவும் அமைந்துவிட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ராகுலை நீக்கிவிட்டு ரோஹித்தை தொடக்க வீரராக இறக்கலாம் என கங்குலி, அசாருதீன், கம்பீர் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தார். ராகுல் தொடர்ச்சியாக சொதப்பிவரும் வேளையில், ரோஹித்துக்கு ஆதரவு பெருகியதால், ரோஹித்துக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தேர்வுக்குழுவும் ஆளானது. 

அதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ராகுல் நீக்கப்பட்டு ரோஹித் சர்மா தொடக்க வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக வலம்வரும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் இடம் கிடைக்காமல் இருந்துவந்தார். எனவே அவர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரும் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஜொலிக்க தொடங்கினால், இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விரட்டாத ஸ்கோரை எல்லாம் விரட்டி சாதனை படைக்கும் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால் ரோஹித் டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக இறக்கப்படுவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் நயன் மோங்கியா. இதுகுறித்து பேசிய நயன் மோங்கியா, தொடக்க வீரர் என்பது, விக்கெட் கீப்பிங்கை போல் பிரத்யேகமான பணி. ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆடுகிறார் என்றாலும் கூட, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்குவதற்கு சூழலுக்கு ஏற்றவாறு மாறி ஆடக்கூடிய மனநிலை வேண்டும். ரோஹித் ஒருநாள் போட்டிகளில், அந்தந்த பந்துக்கு ஏற்றவாறு ரியாக்ட் செய்து ஆடுகிறார். அதுதான் அவரது பலம். அவரது பலம் என்னவோ, அதையே பின்பற்றினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக ஜொலிக்கக்கூடும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பதை கருத்தில்கொண்டு அதற்கான ஒரு ஆட்ட உத்தியை கையாண்டால், அது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை பாதிக்கும் என்று நயன் மோங்கியா தெரிவித்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக ஆடிவரும் தொடக்க வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்காதது குறித்த அதிருப்தியையும் மோங்கியா வெளிப்படுத்தியுள்ளார். அதுகுறித்து பேசிய நயன் மோங்கியா, உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சீசனில் 1000 ரன்களை குவித்த வீரர்களெல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது? ப்ரியங்க் பன்சால், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் உள்நாட்டு போட்டிகளில் 50-60 சராசரி வைத்துள்ளனர். அவர்களுக்குலாம் எப்போது வாய்ப்பு வழங்கப்படும்? இதுமாதிரி விஷயங்கள் எல்லாம் திறமையான இளம் வீரர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் அமைகிறது என்று நயன் மோங்கியா தெரிவித்துள்ளார்.