இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் புஜாராவின் கேட்ச்சை ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக பிடித்தது தான் ஆட்டத்தை தலைகீழாக திருப்பியதாக நேதன் லயன் கூறியுள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்த நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, அறிமுக ஸ்பின்னர் குன்னெமன் சுழலில் சிக்கி முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அறிமுக ஸ்பின்னர் குன்னெமன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

நானும் எத்தனையோ பிளேயர்ஸுக்கு பந்துவீசியிருக்கேன்! புஜாரா மாதிரி ஒரு வீரரை பார்த்ததில்ல - நேதன் லயன் புகழாரம்

அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் அடித்தது. 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வீரர்கள் நேதன் லயன் சுழலில் மண்டியிட்டு சரணடைந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(5), கோலி(13), ஜடேஜா(7) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கையளித்த நிலையில் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத்(3), அஷ்வின்(16) ஆகியோரும் சோபிக்கவில்லை. நேதன் லயனின் சுழலில் இந்திய வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று தனி நபராக போராடி அரைசதம் அடித்த புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல் 15 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி. 76 ரன்கள் என்ற எளிய இலக்கை ஈசியாக அடித்து ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

2வது இன்னிங்ஸில் இந்திய அணியில் மற்ற வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தாலும், நட்சத்திர வீரர் புஜாரா நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த நிலையில் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நேதன் லயனின் சுழலில் புஜாரா அடித்த பந்தை ஃபைன் லெக் ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் நின்ற ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஒற்றை கையில் கேட்ச்சை பிடித்தார். புஜாராவின் பேட்டில் பட்டு வேகமாக சென்ற அந்த பந்தை விக்கெட் கீப்பர் குறுக்கே வந்து இடையூறு செய்தபோதிலும், அதையும் மீறி முழு கவனத்துடன் அபாரமாக அந்த கேட்ச்சை பிடித்தார் ஸ்மித். புஜாரா 8வது விக்கெட்டாக ஆட்டமிழந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 155 ரன்கள். அதன்பின்னர் 163 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

ஒருவேளை புஜாரா தொடர்ந்து பேட்டிங் ஆடியிருந்தால், அவர் இருந்த டச்சிற்கு இந்திய அணி சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்திருக்கலாம். அதற்கு முன்பாக ஒருசில கேட்ச்களை கோட்டைவிட்ட ஸ்மித், புஜாராவின் கேட்ச்சை முக்கியமான கட்டத்தில் பிடித்து ஆட்டத்தையே தலைகீழாக திருப்பினார். அதுவும் அது கடினமான கேட்ச். அந்த கேட்ச் தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று நேதன் லயன் தெரிவித்தார்.