Asianet News TamilAsianet News Tamil

லின், சூர்யகுமார் அதிரடி பேட்டிங்.. மும்பை இந்தியன்ஸை பொட்டளம் கட்டிய ஹர்ஷல் படேல்

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் கிறிஸ் லின் மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான பேட்டிங்கால் சவாலான இலக்கை நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்.
 

mumbai indians set challenging target to rcb in first match of ipl 2021
Author
Chennai, First Published Apr 9, 2021, 9:22 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்துவரும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், குவாரண்டினில் இருப்பதால், அவருக்கு பதிலாக கிறிஸ் லின் ஆடுகிறார். ரோஹித் சர்மாவும் கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாக இறங்கினார்.

கிறிஸ் லின் ஆரம்பத்தில் திணற, ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். ரோஹித் சர்மா நன்றாக ஆடிக்கொண்டிருந்த 4வது ஓவரின் கடைசி பந்தில் கிறிஸ் லின் ரன்னுக்கு அழைத்துவிட்டு, பின்னர் மறுத்ததால், ரோஹித் சர்மா 19 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் அவுட்டாகும் போது மும்பை அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 24. 

ரோஹித்தை ரன் அவுட்டாக்கிவிட்டதால், கூடுதல் பொறுப்புடன் ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த கிறிஸ் லின், அதிரடியாக ஆடினார். லின்னும் சூர்யகுமாரும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து லின்னும் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, அணியின் ரன்வேகம் குறைய தொடங்கியது. ஹர்திக் பாண்டியா(13), இஷான் கிஷன்(28), க்ருணல் பாண்டியா(7), பொல்லார்டு(7) ஆகியோரும் ஏமாற்றமளிக்க, 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 159  ரன்கள் மட்டுமே அடித்தது. ஹர்ஷல் படேல் அபாரமாக வீசி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, எங்கோயோ போயிருக்க வேண்டிய மும்பை அணியின் ஸ்கோரை  159 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.

ஆனாலும் சென்னை ஆடுகளத்தில் இதுவே சவாலான இலக்குதான் என்பதால் ஆர்சிபிக்கு வெற்றி எளிதல்ல. மேலும் மும்பை அணியில் பும்ரா, போல்ட் ஆகிய அனுபவம் வாய்ந்த டாப் ஃபாஸ்ட் பவுலர்களும், அவர்களுடன் தென்னாப்பிரிக்காவின் ஜென்சனும் இருப்பதால் இலக்கை விரட்டுவது ஆர்சிபிக்கு சவாலான காரியம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios