ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றி வெற்றி கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

ரோஹித் சர்மாவும் குயிண்டன் டி காக்கும் அதிரடியாக தொடங்கினர். முதல் ஓவரிலேயே அடிக்க தொடங்கிய ரோஹித் சர்மா, அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அதிரடியாக ஆடிய ரோஹித், 24 ரன்களில் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் 23 ரன்களிலும் லெவிஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் குயிண்டன் டி காக் களத்தில் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரால் பெரிய ஷாட்டுகளை எளிதாக ஆடி ரன்களை குவிக்க முடியவில்லை. சன்ரைசர்ஸ் பவுலர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக வீசி ரன்களை கட்டுப்படுத்தினர். 

ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் பொல்லார்டு 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பவர் ஹிட்டர்கள் இருவருமே ஏமாற்ற, 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடித்தது. குயிண்டன் டி காக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்திருந்தார். 

163 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சஹா 25 ரன்களிலும் கப்டில் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வில்லியம்சன், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா என சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் மனீஷ் பாண்டே களத்தில் நிலைத்து நின்று அதிரடியாக ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து முகமது நபியும் நன்றாக ஆடினார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் மூன்று பந்துகளில் 8 ரன்கள் அடிக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்த நபி, நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் அடித்த மனீஷ் பாண்டே, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை டிரா செய்தார். கடைசி பந்தில் சிக்ஸர் கொடுக்காமல் கட்டுப்படுத்தியிருந்தால் மும்பை வென்றிருக்கும். ஆனால் மனீஷின் சிக்ஸரால் சூப்பர் ஓவர் போடப்பட்டது. 

சூப்பர் ஓவரில் மனீஷ் பாண்டேவும் நபியும் களமிறங்கினர். அந்த ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தில் இரண்டாவது ரன் ஓட முயன்று மனீஷ் ரன் அவுட்டானார். இரண்டாவது பந்தில் கப்டில் சிங்கிள் அடிக்க, மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்த நபி, நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். 2 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் அணி இழந்துவிட்டதால், 4 பந்துகளில் சூப்பர் ஓவரை இழந்துவிட்டது சன்ரைசர்ஸ். சூப்பர் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தது சன்ரைசர்ஸ்.

9 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா - பொல்லார்டு ஆகிய இருவரும் களமிறங்கினர். சூப்பர் ஓவரை ரஷீத் கான் வீசினார். முதல் பந்திலேயே ஹர்திக் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார். இரண்டாவது பந்தில் ஹர்திக் சிங்கிள் அடிக்க, மூன்றாவது பந்தில் பொல்லார்டு இரண்டு ரன்கள் அடித்து போட்டியை முடித்துவைத்தார். 

இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், டெல்லி கேபிடள்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.