IPL 2023: இஷான் கிஷன் அதிரடி அரைசதம்.. சாம்பியன் அணினா என்னனு காட்டிய MI..! KKR-ஐ வீழ்த்தி அபார வெற்றி
ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் 2 போட்டிகளிலும் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த போட்டியில் ஜெயித்த நிலையில், வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இன்று கேகேஆரை எதிர்கொண்டது. வெற்றி தோல்வியை மாறி மாறி பெற்றுவரும் கேகேஆரும் வெற்றி முனைப்பில் களமிறங்கியது.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடியதால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்தார். அர்ஜுன் டெண்டுல்கர் இந்த போட்டியில் அறிமுகமானார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:
இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டிம் டேவிட், நெஹல் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, டுயான் யான்சன், ரைலீ மெரிடித்.
IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்
கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், நிதிஷ் ராணா (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன் (0) மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ்(8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்தார். மறுமுனையில் நிதிஷ் ராணா(5), ஷர்துல் தாகூர்(13), ரிங்கு சிங் (18) ஆகியோர் சொதப்பினாலும் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயர் சதமடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். வெஙடேஷ் ஐயர் 51 பந்தில் 104 ரன்களை குவிக்க, கேகேஆர் அணி 20 ஓவரில் 185 ரன்கள் அடித்தது.
186 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக ஓபனிங்கில் இறங்கினார். ரோஹித் சர்மா 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 25 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 58 ரன்களை குவித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடி 25 பந்தில் 43 ரன்களும், திலக் வர்மா 25 பந்தில் 30 ரன்களும் அடித்தனர். டிம் டேவிட் 13 பந்தில் 24 ரன்கள் அடிக்க, 18வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தொடர் தோல்விகள்..! ரிக்கி பாண்டிங்கை சீண்டிய சேவாக்
5 முறை சாம்பியன் அணியாக தாங்கள் திகழ்வதற்கான அர்த்தத்தை புரியவைக்கும் விதமாக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.