தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஹனுமா விஹாரி கண்டிப்பாக ஆட வேண்டும் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்றது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி ஆகிய முதன்மை டெஸ்ட் வீரர்கள் ஆடவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த கம்பேக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட மயன்க் அகர்வால், ஒரே போட்டியில் சதமும் அரைசதமும் அடித்து அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வீரரான ஹனுமா விஹாரிக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி ஆகிய வீரர்கள் ஆடுகின்றனர். எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆடும் லெவன் தேர்வு மிகச்சவாலாக இருக்கும்.

இந்நிலையில், இந்திய அணி தேர்வு குறித்து பேசிய முன்னாள் தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத், ஹனுமா விஹாரி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதேவேளையில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியில் ஆடிய ஹனுமா விஹாரி 3 அரைசதங்கள் அடித்தார். இந்தியாவிற்கு வெளியே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். எனவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹனுமா விஹாரி கண்டிப்பாக ஆடவேண்டும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.