இந்திய அணியின் தலைமை தேர்வாளராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் தனது பதவிக்காலத்தில் கடும் சர்ச்சைகளில் சிக்கினார். அவரது தலைமையிலான தேர்வுக்குழுவின் அணி தேர்வு பல தருணங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு பிறகு முச்சதமடித்த இரண்டாவது வீரர் கருண் நாயர் தான். அவரது கெரியரை முடித்துவைத்தது, 2019 உலக கோப்பை அணியில் ராயுடுவை எடுக்காதது, 4ம் வரிசை வீரருக்கான தேடலின்போது சில வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிக்காதது, சில வீரர்களை காரணமே இல்லாமல் புறக்கணித்தது என கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

அணி தேர்வை சுயமாக எம்.எஸ்.கே.பிரசாத் செய்யவில்லை. கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விரும்பும் வீரர்களைத்தான் அவர் தேர்வு செய்து கொடுக்கிறார். கையாலாகாத எம்.எஸ்.கே.பிரசாத் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், தனது பதவிக்காலத்தை முடித்துவிட்ட பிரசாத், கருண் நாயருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் வாய்ப்புகள் அளிக்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள எம்.எஸ்.கே.பிரசாத், கருண் நாயர் முச்சதம் அடித்தும் கூட இந்திய டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் எடுக்காமல் விட்டது வருத்தமளிக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரு வீரர் தனது மறுவாய்ப்பிற்காக கஷ்டப்பட்டது அரிதான சம்பவம். அது உண்மையாகவே இதயத்தை நொறுங்க செய்கிறது. அவருக்கு மட்டுமல்ல எங்கள் அனைவருக்கும்தான் என்று தெரிவித்துள்ளார்.

2016ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் முச்சதம் அடித்த கருண் நாயர், அதன்பின்னர் வெறும் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் ஓரங்கட்டப்பட்டார். அவர் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. கெரியரின் தொடக்கத்திலேயே முச்சதம் அடித்த கருண் நாயரின் கெரியரை அத்துடன் முடித்துவைத்து மிகக்கொடுமை. கருண் நாயர் ஓரங்கட்டப்பட்டதற்கு பின் கேப்டன் கோலியின் தலையீடு இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படியிருந்திருந்தால், அதை அப்போதே சொல்லியிருக்க வேண்டும் அல்லது கோலியின் தலையீட்டை மீறி அணியில் அவரை எடுத்திருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டுவிட்டு, கருண் நாயரின் கெரியரை முடித்துவைத்துவிட்டு, இப்போது மழுப்புகிறார்.