ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூக்கு எதிராக 16 ரன்கள் அடித்த தோனி, டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
ஐபிஎல் 15வது சீசனில் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 210 ரன்கள் அடித்தது.
ராபின் உத்தப்பாவின் அதிரடி அரைசதம் (27பந்தில் 50), மொயின் அலி (22 பந்தில் 35) மற்றும் ஷிவம் துபேவின் (29 பந்தில் 49) ஆகியோரின் அதிரடியான பேட்டிங் மற்றும் தோனியின் அதிரடி ஃபினிஷிங் (6 பந்தில் 16) ஆகியவற்றால் 20 ஓவரில் 210 ரன்கள் அடித்தது சிஎஸ்கே அணி. 211 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணி விரட்டிவருகிறது.
இந்த போட்டியில் 15 ரன்கள் அடித்தால் தோனி டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டலாம் என்ற நிலை இருந்தது. தோனி 6 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்துவிட்டார் தோனி.
டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல்) 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரர் தோனி ஆவார். இதற்கு முன் கோலி, ரோஹித், ரெய்னா, தவான் மற்றும் உத்தப்பா ஆகிய ஐவரும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேற்கூறிய 5 வீரர்களுக்கு அடுத்து 6ம் இடத்தில் உள்ளார் தோனி.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள்:
விராட் கோலி - 10,326 ரன்கள்
ரோஹித் சர்மா - 9,936 ரன்கள்
சுரேஷ் ரெய்னா - 8654 ரன்கள்
ஷிகர் தவான் - 8,818 ரன்கள்
ராபின் உத்தப்பா - 7,120 ரன்கள்
தோனி - 7001 ரன்கள்
