IPL 2024, MS Dhoni: முடிவுக்கு வந்த தோனியின் சகாப்தம் – அவசர அவசரமாக கேப்டன் மாற்றப்பட காரணம், தோனியின் ஓய்வா?
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனுடன் தோனி ஓய்வு பெறுவதாக கூறப்படும் நிலையில் தான் தற்போது அவசர அவசரமாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது தலைமையிலான சிஎஸ்கே 5 முறை டிராபியை வென்றுள்ளது. 5 முறை 2ஆவது இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் 14 சீசன்களில் 12 முறை சிஎஸ்கே பிளே ஆஃப் வரை வந்துள்ளது. 2 முறை பிளே ஆஃப் கூட எட்டவில்லை. ஒரு கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி 141 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணியில் எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கேப்டன்களாக பணியாற்றியிருக்கின்றனர்.
எம்.எஸ்.தோனி – 2008 முதல் 2023 வரை – 235 போட்டிகள் – 142 வெற்றி, 90 தோல்வி, ஒரு போட்டி டை- வெற்றி சதவிகிதம் 60.42.
சுரேஷ் ரெய்னா - 2010 முதல் 2019 வரை – 6 போட்டிகள் – 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டை – வெற்றி சதவிகிதம் 33.33
ரவீந்திர ஜடேஜா – 2022 – 8 போட்டிகள் – 2 வெற்றி, 6 தோல்வி – வெற்றி சதவிகிதம் 25.
தற்போது ருதுராஜ் கெய்க்வாட் 2024 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தோனியின் ஓய்வு தான் காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது 42 வயது எட்டிய தோனி, கடந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர், நான் அடுத்த சீசனிலும் விளையாடுவேன் என்று கூறியிருந்தார். மேலும், முழங்கால் வலியால் அவதிப்பட்ட வந்த தோனி அந்த சீசன் முடிந்த உடன் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதன் பிறகு ஓய்வில் இருந்தார்.
எனினும், இந்த சீசன் முழுவதும் அவரால் முற்றிலுமாக விளையாட முடியுமா என்பது கேள்விக்குறி தான். இதன் காரணமாகத் தான் தோனியை கேப்டன் பொறுப்பிலிருந்து அவசர அவசரமாக மாற்றி அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமித்துள்ளனர்.
தோனியுடன் இணைந்து விளையாடி அவரிடமிருந்து கேப்டனுக்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த சீசனில் ருதுராக் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் அவர் கேப்டனாக எந்தளவிற்கு தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறாரோ, அதை வைத்து இனி வரும் சீசன்களில் அவர் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.