ஐபிஎல் 16வது சீசனுக்கான பயிற்சியை சிஎஸ்கே அணி தொடங்கியுள்ள நிலையில், சென்னை வந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு மலர் தூவி அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ள நிலையில், அதற்கடுத்தபடியாக அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற, அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய அணி என ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணியை வைத்திருப்பவர் தோனி.
ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாளை(மார்ச் 4) முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் தொடங்குகிறது. மார்ச் 31 முதல் ஐபிஎல் தொடங்குகிறது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் சென்னையில் தான் தனது கடைசி போட்டியை ஆடுவேன் என்று உறுதியளித்திருக்கிறார். இந்த சீசன் முழுக்க இந்தியாவில் நடப்பதால் தோனி சென்னையில் ஆடிவிட்டு ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 31ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கே அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
அதற்காக சிஎஸ்கே வீரர்கள் ரஹானே, ராயுடு, பிரசாந்த் சோலங்கி, துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்கள் சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், கேப்டன் தோனியும் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தோனிக்கு மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்கு சென்ற தோனிக்கு ஹோட்டலிலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் அமோக வரவேற்பளிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
