Asianet News TamilAsianet News Tamil

Mohammad Rizwan ஐசியூவிலிருந்து நேரா வந்து அரையிறுதியில் அபாரமாக ஆடிய முகமது ரிஸ்வான்! பாகிஸ்தானின் ரியல் ஹீரோ

2 நாட்களாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஐசியூவிலிருந்து வந்து பாகிஸ்தானுக்காக அருமையாக ஆடி அரைசதம் அடித்துக்கொடுத்தார். உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அவர் களமாடிய செயல், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது. அவருக்கு முன்னாள் ஜாம்பவான்களும் ரசிகர்களும் பாராட்டுமழை பொழிந்துவருகின்றனர்.
 

mohammad rizwan was in icu for 2 days before semi final match against austrlaia in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 12, 2021, 2:13 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரின் ஃபைனலுக்கு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளன. ஃபைனல் வரும் 14ம் தேதி துபாயில் நடக்கிறது.

இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளை வீழ்த்தியதுடன், ஆடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வான் (52 பந்தில் 67 ரன்கள்)  மற்றும் ஃபகர் ஜமான் (32 பந்தில் 55 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (39) ஆகியவற்றால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் (49) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் (40) பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மேத்யூ வேடின் காட்டடி பேட்டிங் (17 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 19வது ஓவரிலேயே  177 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்த உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணி, அரையிறுதியுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணியால் கோப்பையை வெல்லமுடியாமல் போயிருந்தாலும், இந்த தொடரில் பாகிஸ்தான் ஆடிய விதம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரசிகர்களுக்கு பாகிஸ்தான் போட்டிகள் முழு எண்டர்டெய்மெண்ட்டாக அமைந்தன.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் தோற்றிருந்தாலும், கோடிக்கணக்கான இதயங்களை வென்றுவிட்டார் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆடுவதற்கு முன், சுவாச குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக 2 நாட்கள் துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்றார் ரிஸ்வான். இந்த போட்டிக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் ஐசியூவில் இருந்த ரிஸ்வான், போட்டி நாளான நேற்று(நவம்பர் 11) காலை தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியே வந்தார்.

அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு ஓய்வு எடுக்குமாறு கேப்டன் பாபர் அசாமே கூறியிருக்கிறார். ஆனால் நாட்டுக்காக ஆடியே தீருவேன் என்ற உறுதியுடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கி ஆடிய முகமது ரிஸ்வான், அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். 52 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்தார். 18வது ஓவரில் தான் ரிஸ்வான் ஆட்டமிழந்தார். உடல்நலக்குறைவுடன் ஓபனிங்கில் இறங்கி கிட்டத்தட்ட 20 ஓவர்கள் பேட்டிங் ஆடிவிட்டு, அதன்பின்னர் 2வது இன்னிங்ஸில் 20 ஓவர்கள் முழுமையாக விக்கெட் கீப்பிங்கும் செய்தார் ரிஸ்வான். இது கண்டிப்பாக எளிதான காரியம் அல்ல. 

விக்கெட் கீப்பிங் செய்வது பொதுவாகவே சற்று கடினம். அதிலும் உடல்நலக்குறைவுடன் 18 ஓவர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடிவிட்டு அதன்பின்னர் விக்கெட் கீப்பிங்கும் செய்த ரிஸ்வானின் செயல் பாகிஸ்தானியர்களின் இதயங்களை வென்றுவிட்டது. அவரை ரியல் ஹீரோவாக கொண்டாடுகின்றனர் பாகிஸ்தான் ரசிகர்கள்.

ரிஸ்வான் ஒரு போராளி. இந்த தொடர் முழுவதுமாகவே அருமையாக ஆடினார். அவரது துணிச்சல் அபாரமானது என்று பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்ட மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரிஸ்வானை பாகிஸ்தானின் ஹீரோ என்று ஷோயப் அக்தர் டுவிட்டரில் புகழ்ந்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios