முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், ஒரு காலத்தில் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு போட்டிக்கு வெறும் ₹1,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசுத் தொகையில் உள்ள வேறுபாடு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளுக்கு ஒரு காலத்தில் வெறும் 1,000 ரூபாய் போட்டி சம்பளம் வழங்கப்பட்டது என முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது. அண்மையில் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணிக்கு ஆடவர் அணியை விட குறைவான பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மிதாலி ராஜின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வரலாற்றில் முதல்முறையாக 2025 மகளிர் உலகக் கோப்பையை வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த மகத்தான வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட்டில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.
இந்த உலகக் கோப்பை வெற்றியின் மூலம், இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பரிசுத் தொகையை (சுமார் ரூ. 39.78 கோடி) வென்றுள்ளது. அத்துடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அணியின் இந்தச் சாதனையைப் பாராட்டி மேலும் ரூ. 51 கோடி ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளது.
முன்பு உலகக் கோப்பை வென்ற ஆண்கள் அணிக்கு ரூ.125 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், பெண்கள் அணிக்கு அந்தத் தொகையில் பாதியைக்கூட பிசிசிஐ வழங்கவில்லை.
மிதாலி ராஜின் நினைவலைகள்
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஏற்றம் கண்கூடாகத் தெரிந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இவ்வளவு சிறப்பாக இல்லை. மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளரான மிதாலி ராஜ், சமீபத்தில் ஒரு நேர்காணலில் (Lallantop) தான் விளையாடிய நாட்களுக்கும் இன்றைய நிலைக்கும் உள்ள வியத்தகு வேறுபாட்டைப் பகிர்ந்துகொண்டார்.
2005 மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாமிடம் பிடித்தபோதும், வீராங்கனைகளுக்கு ஒரு போட்டிக்கு வெறும் ரூ. 1,000 மட்டுமே வழங்கப்பட்டதாக மிதாலி ராஜ் கூறினார்.
"அப்போது ஆண்டு ஒப்பந்தங்கள் இல்லை. போட்டிக்குச் சம்பளம் (Match Fees) கிடையாது. 2005 உலகக் கோப்பைக்காக மட்டும்தான் ஒரு போட்டிக்கு ரூ. 1,000 கிடைத்தது. மற்றபடி, எங்களுக்குப் போட்டிச் சம்பளமே இல்லை," என்று அவர் தெரிவித்தார்.
1973 முதல் 2006 வரை, இந்திய மகளிர் கிரிக்கெட் இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் (WCAI) கட்டுப்பாட்டில் இருந்தது. 2006 நவம்பரில் WCAI, பிசிசிஐயுடன் இணைக்கப்பட்டது.
"பிசிசிஐ-யின் கீழ் வந்த பிறகுதான் (போட்டிச் சம்பளம் மற்றும் ஆண்டு ஒப்பந்தங்கள்) தொடங்கின. முதலில் தொடருக்கு ஒருமுறையும், பின்னர் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்பட்டது. சமீபத்தில்தான், ஆடவர் அணிக்கு இணையான சம்பளச் சமநிலை கொண்டுவரப்பட்டது," என்று மிதாலி ராஜ் கூறினார்.
சம ஊதிய அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இந்த மாற்றம், பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுகளால் நிகழ்ந்தது. 2022 அக்டோபரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சமமான போட்டிச் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ. 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சம், மற்றும் டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் எனச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.
