உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி கண்டன. 

1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாகவே உள்ளன. ஸ்மித் மற்றும் வார்னர் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி எழுச்சி கண்டுள்ளது. நியூசிலாந்து அணியும் அபாரமாக ஆடிவருகிறது. வில்லியம்சன், ரோஸ் டெய்லர் ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், சாண்ட்னெர் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அபாரமாக ஆடுகின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ரபாடா, இங்கிடி, ஸ்டெய்ன் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக கருதப்பட்டாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ஆர்டர் அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் டெப்த்தும் உள்ளது. 8ம் வரிசை வரை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். கெய்ல், ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, பூரான் என நல்ல பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. பவுலிங்கில் ஒஷேன் தாமஸ் அசத்துகிறார். 

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கூட அந்த அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவாக இருக்கின்றன.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எஞ்சிய ஒரு இடத்தைத்தான் பலரும் பல அணிகளுக்கு பகிர்ந்துகொடுத்தனர். 

இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். எஞ்சிய ஒரு இடத்தை வெஸ்ட் இண்டீஸ் பிடிக்கும் என கும்ப்ளே கருத்து தெரிவித்திருந்தார். அதே கருத்தைத்தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனும் தெரிவித்திருந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து நான்காவது அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று கும்ப்ளேவும் பீட்டர்சனும் தெரிவித்திருந்தனர். 

ஆனால் நான்காவது அணியாக பாகிஸ்தான் அணிதான் முன்னேறும் என்றும் எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கருத்து தெரிவித்துள்ளார்.